விருந்தோம்பல்

3 கருத்துகள்

நாம் உறவினர் வீடுகளுக்கு செல்வதே அவர்களை பார்த்து பேசி வருவதற்கு தான்.ஆனால் ஒரு சில அனுபவங்களால் எந்த வீட்டிற்கும் போக விருப்பமில்லாமல் ஆகி விட்டது.

அலுவலக வேலை செய்த களைப்பு இருந்தாலும் உறவுகளை பார்க்கவென்று 1/2 நாளை ஒதுக்கி பார்க்க சென்றால் அவர்கள் நடந்து கொள்ளும் விதம் அடுத்த முறை அங்கு செல்லும் ஆர்வத்தை அடியோடு குறைக்கிறது.

நான் அனைவரையும் குறை சொல்லவில்லை.ஒரு சிலர்  அப்படி நடந்து கொள்வதால் தான் கோபம் வருகிறது.

எனது நெருங்கிய உறவினர் தான்.அவரது வீடு எனது அலுவலகம் செல்லும் வழியில் இருக்கும்.அவரை வாரம் ஒரு முறையாவது சென்று பார்த்து வருவது வழக்கம்.

இப்பொழுது புது அலுவலகம் மாறி இருப்பதால் அடிக்கடி செல்ல முடியவில்லை.வரவே இல்லை என்று குறைபட்டதால் என்னவரையும் அழைத்து கொண்டு சனிக்கிழமை மாலை சென்றேன்.

நாங்கள் சென்றதிலிருந்து 2 மணி நேரமாக டிவி தான் பார்த்து கொண்டிருந்தார்.நடுவில் ஞாபகம் வந்தது போல் நலம் விசாரிப்புகள் :)

ஃபுட்பால் மேட்சை எனக்கு அதில் ஆர்வம் இல்லாத போதிலும் வேறு வழி இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.

இப்படியாக 2 மணி நேரம் ஓட்டிவிட்டு விடை பெற்று வந்தோம்.இது சமீபத்திய உதாரணம் தான்.

இந்தியா செல்லும் பொழுது ஒரு சில உறவு வீடுகளிலும் இதே கதை தான்.
சீரியலுக்கு குடுக்கும் முக்கியத்துவம் வருடம் ஒரு முறை செல்லும் நமக்கு இல்லை.

இதில் கொடுமை என்னவென்றால் நம்மையும் அதை பார்க்க சொல்லுவது...........
எனக்கு சீரியல் பார்க்கும் வழக்கம் இல்லை என்றால் உனக்கு அங்கே எப்படி பொழுது போகிறது இதையெல்லாம் பார்க்காமல் என்று நக்கல் வேறு...

அலுவலகம், வீடு என சுழலும் பரபரப்பான வாழ்க்கையில் இன்னும் 4 மணி நேரம் கூட கிடைக்காதா என நினைக்கையில் பொழுது போக்க அழுகாச்சி சீரியல் தானா கிடைத்தது?

எப்பொழுதுதான் திருந்துவார்களோ???

உங்களை முக்கியம் என்று கருதி தான் ஒருவர் நேரம் ஒதுக்கி சந்திக்க வருகிறார்.நீங்கள் அவர்களை கொண்டாடவில்லை என்றாலும் இப்படி படுத்தாமல் இருக்கலாமே....

கடிதம்

0 கருத்துகள்

கடிதம்

சமையல் பதிவுகள் மட்டும் அல்லாது வேறு சில விஷயங்களையும் பதிவு போடலாம் என்று வெகு நாட்களாக நினைத்துண்டு.நேரமின்மையால் தள்ளி போட்டுக் கொண்டே வந்தேன். 

இனிமேல் வாரம் ஒருமுறையாவது இதுபோல் பதிவு எழுதலாம் என எண்ணியுள்ளேன்.

சமீபத்தில் வந்த என் பிறந்தநாளின் போது முகநூலிலும், மின்னஞ்சலிலும் நிறைய வாழ்த்துக்கள் வந்தன.

என் தந்தை கூட Whatsappல் தான் முதலில் வாழ்த்தினார்.ஆனால் சிறுவயதில் வந்த வாழ்த்து அட்டைகளை தான் மனம் அதிகம் விரும்புகிறது.

என் தந்தை சவூதியில் இருந்த பொழுது என் அம்மாவிற்கு எழுதுகிற ஒவ்வொரு கடிதத்திலும் எனக்கு என்று ஒரு சிறு கடிதம் இருக்கும்.

பள்ளியில் இருந்து வந்ததும் அதை ஆசையுடன் படிக்கும் பொழுது இருக்கும் ஆனந்தம் இப்பொழுது வரும் குறுஞ்செய்தியிலோ மின்னஞ்சலிலோ சுத்தமாக இல்லை.

எனது பிறந்தநாளிற்கு ஒரு மாதம் முன்பிருந்தே என் தந்தை அனுப்ப போகும் வாழ்த்து அட்டைக்காக காத்திருக்க ஆரம்பித்து விடுவேன்.ஆனால் இப்பொழுது உள்ளவர்களுக்கு அந்த சந்தோஷம் எல்லாம் இல்லை.சில தடவைகள் அந்த அட்டைகள் உள்ளே பொம்மை ஸ்டிக்கர் வேறு இருக்கும்.அதை தோழிகளிடம் காட்ட பத்திரமாக எடுத்து வேறு வைப்பேன் :)

எனது அலமாரியில் சிறு வயது முதலே சேர்த்த கடிதஙளும் வாழ்த்து அட்டைகளும் நிறைய உண்டு..

என் தந்தை சவூதியில் இருந்து ஊருக்கு வரும் பொழுது "அமானிதம்" என்று நிறைய கடிதங்கள் எடுத்து வருவார்.மறுநாள் அதற்குரியவர்கள் வந்து வாங்கி செல்வார்கள்.சில நேரம் பொருட்களும் அப்படி வருவதுண்டு.

எனது தாத்தா சில நேரம் அம்மாவிடம் சவூதிக்கு ஆள் போகிறார்கள், கடிதம் அனுப்ப வேண்டும் என்றால் சீக்கிரம் எழுது என்பார்கள்.அவர்களும் எந்த வேலையாக இருந்தாலும் போட்டுவிட்டு கடிதம் எழுத உட்கார்ந்து விடுவார்கள்.

இப்பொழுது நினைத்தால் குறுஞ்செய்தி அனுப்புகிறோம் பார்த்து பேசும் வசதி உள்ளது ஆனால் இந்த அவசர யுகத்தில் ஆத்மார்த்தமான சில விஷயங்களை நாம் அனுபவிக்க மறந்துவிட்டோம்.

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes