அம்மம்மாவும், கோலா மீனும் - 2

அம்மம்மாவும், கோலா மீனும் - 2


முதல் பகுதியை காண :

அம்மம்மாவும், கோலா மீனும் - 1


பொதுவாகவே எங்கள் வீட்டில் சமையல் வேலை எல்லாம் அம்மா, சித்தி தான் பார்ப்பார்கள். பாத்திரம் கழுவ, துணி துவைக்க ஆள் உண்டு.

அம்மம்மா மீன், கோழி எல்லாம் சுத்தம் செய்து தருவது இஞ்சி பூண்டு உரிப்பது போன்ற வேலை மட்டுமே செய்வார்கள். அதான் அவங்க டிபார்ட்மெண்ட். என்றாவது ஒரு நாள் அம்மா, சித்தி இருவருமே வீட்டில் இல்லை என்றால் தான் அம்மம்மா சமைப்பார்கள்.

கொஞ்சம் மெதுவாக தான் செய்வார்கள். ஆனால் நல்ல சுவையாக இருக்கும்.
நெய்சோறு, பணியாரம் சுடுவது எல்லாம் அவர்கள் தான் செய்வார்கள்.
இன்னும் என் அம்மம்மா போல் எங்களுக்கு நெய்சோறு நன்றாக அமையாது.

அம்மம்மாவும் மீனை நன்றாக கழுவி குழம்பு வைத்து, பொரியல் எல்லாம் செய்து வைத்து விட்டார்கள்.

அப்பாவிற்கும் வைத்து கொடுத்து அவர்களும் சாப்பிட்டு விட்டார்கள்.

நாங்கள் டாக்டரை எல்லாம் பார்த்து விட்டு 9 மணி போல் தான் வீடு வந்து சேர்ந்தோம்.

வந்ததும் என் அம்மா அம்மம்மாவிடம் சென்று என்னம்மா அத்தா சாப்பிட்டு விட்டார்களா என்று விசாரித்தார்.

உடனே அம்மம்மா என்னவோ தெரியவில்லை அத்தா மீன் வேண்டும் என்று ஆசையாக கேட்டு விட்டு சரியாகவே சாப்பிடவில்லை என்று
கூ றினார்கள்.

என் அம்மாவும் அப்பாவிடம் போய் ஏன் சரியாக சாப்பிடவில்லை மீன் நன்றாக இல்லையா என கேட்க அப்பா உடனே புது மீனாக தான் இருந்தது ஆனால் இன்று என்னவோ ஒரு புது மாதிரி வாசனையாக இருந்தது. என்னால் அதனை சாப்பிடவே முடியவில்லை.

பொரித்த மீன் என் அப்பா எப்பொழுதும் சாப்பிட மாட்டார்கள். குழம்பு மீன் மட்டும் தான் சாப்பிடுவார்கள்.

அப்படி என்ன வாசனை இந்த மீனில் என்று குழம்பு சட்டியில் பார்த்தால் திறந்துமே ஒரு வித எசென்ஸ் வாசனை வந்தது.

அப்புறம் சாப்பிடும் பொழுது மீனை பார்த்தால் அதே வாசனை. குழம்பு கேட்கவே வேண்டாம் ஒரே இனிப்பு வேறு.

என் சித்தி தான் கடைசியில் கண்டுபிடித்தார்கள். அம்மா நீ எந்த டப்பாவில் உள்ள மசாலாவை குழம்பு கரைக்க எடுத்தாய் என.

உடனே என் அம்மம்மா இது தெரியாதா மேலே உள்ள சில்வர் டப்பா தான் என காட்டினார்கள்.

குழம்பு தூள் டப்பா அடுத்த அடுக்கில் இருக்கு. நீ கரைத்தது காம்ப்ளான் என்று சொன்னார்கள்.

பிறகு தான் தெரிந்தது அம்மம்மா குழம்பு வைக்கும் சமயம் கரண்ட் கட் ஆனதில் ஏற்பட்ட குழப்பம் தான் இது.

பொரித்த மீன் காலியாகி விட்டது. குழம்பு தான் யாருமே தொடவில்லை.

மறுநாள் பூனைக்கு வைத்தால் அந்த வாசத்திற்கு அது கூட சாப்பிடாமல் ஓடி விட்டது.

அப்புறம் என்ன இதனை நினைத்து நினைத்து சிரித்து கொண்டே இருந்தோம்.

ஒரு வழியாக காம்ப்ளான் மீன் குழம்பு என் உறவினர்ள் வரை பரவி விட்டது.

இப்பொழுது தலைப்புக்கான காரணம் எல்லோருக்கும் புரிந்திருக்குமே ..

இரண்டு பதிவுகளையும் பொறுமையாக படித்ததற்கு மிக்க நன்றி.

என் அம்மம்மா, அப்பா இருவரும் இப்பொழுது உடம்பு அவ்வளவாக சுகமில்லாமல் தான் இருக்கிறார்கள். வயதானால் தான் எல்லா நோய்களும் சேர்ந்து கொள்கிறதே.

அவர்கள் நீண்ட ஆயுளுடன் நோய் நொடியில்லாமல் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.




4 கருத்துகள்:


  1. இந்த பதிவு நல்ல நகைச்சுவையாக இருந்தது ஷமீ. எனக்கும் தலைப்பின் அர்த்தம் புரிந்தது. அம்மம்மாவும், அப்பாவும் நலமுடன் வாழ எனது பிரார்த்தனைகள். நான் நாளைக்கு கோவில் திருவிழாவுக்கு ஊருக்கு செல்கிறேன். புதன் கிழமை வந்து விடுவேன்.

    பதிலளிநீக்கு
  2. பிரார்த்தனைக்கும், பதிவை ரசித்தமைக்கு ரொம்ப நன்றி மா.

    திருவிழா போயிட்டு வந்ததை ஒரு பதிவா போடுங்க.

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி அக்கா.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes