அத்தம்மாவின் அலம்பல்கள் - 2


அத்தம்மாவின் அலம்பல்கள் - 2

சென்ற பதிவில் அத்தம்மாவை பற்றி சில விஷயங்களை பகிர்ந்தேன்.அதன் தொடர்ச்சி இங்கே........

திருமணம் போன்ற நிகழ்ச்சியின் போது பெரியத்தா, சின்னத்தா, மாமி குடும்பங்கள் ஒன்றாக இருக்கும் போது இது போன்ற சுவாரசியமான விஷயங்களை பேசி விடிய விடிய சிரிப்பு தான்.

அதிலும் எங்கள் அத்தம்மா முட்டை வாங்கியது சூப்பர் .இந்த விஷயத்தை எப்பொழுது நினைத்தாலும் சிரிப்பை அடக்கவே முடியாது.

எப்பொழுதும் அத்தம்மா நாட்டு முட்டை வந்தால் வாங்குவார்.வீட்டில் கோழிகள் எல்லாம் வளர்த்த பொழுதும் யாராவது விற்க வந்தால் உடனே வாங்கி விடுவார். மிகவும் இரக்க சுபாவம் வேறு.

ஒருமுறை  ஒரு பெண் கொண்டு வந்த முட்டைகளை வாங்கவென்று முடிவு செய்து மருமகள்களை கூப்பிட்டு பார்த்தார்.

அனைவரும் அப்பொழுது மதிய உணவிற்கு பின் தூங்கி கொண்டிருந்தனர்.அவரே ஒரு பாத்திரத்தில் தண்ணீர் பிடித்து வந்து முட்டைகளை போட்டு நல்ல முட்டை தான் என்று உறுதி செய்துக் கொண்டு அனைத்து முட்டைகளையும் வாங்கி விட்டார்.

மாலை மருமகள்கள் எழுந்து வந்ததும் என் பெரியம்மாவை அழைத்து நாட்டு முட்டை வாங்கி வைத்திருக்கிறேன். உள்ளே எடுத்து வை. இனிமேல் பிள்ளைகளுக்கு இதை ஊற்றி கொடுங்கள் என்று சொன்னார்.

என் பெரியம்மா முட்டைகளை எடுத்து பார்த்து அதிர்ச்சி அடைந்து விட்டார்.அனைத்தும் மிகவும் சிறிய அளவில் இருந்திருக்கிறது.

உடனே அவர் என்ன மாமி இப்படி வாங்கி இருக்கீங்க எல்லாம் குட்டி குட்டியா இருக்கு ஒன்று கூட பெரிய முட்டை இல்லையே உங்களை நன்றாக ஏமாற்றி விட்டார்கள் என்று சொல்லி விட்டார்.

உடனே அத்தம்மா இல்லையே நான் கண்ணாடி போட்டு பார்த்து தானே வாங்கினேன். எல்லாம் பெரிய பெரிய முட்டை தானே என்று சொல்லி சமாளித்தார்.

பவர் கிளாசில் பார்க்க அவருக்கு எல்லாமே பெரியதாக தெரிந்திருக்கிறது. விஷயம் எல்லாருக்கும் தெரிந்து ஒரே சிரிப்பு தான்.முப்பது முட்டைகளும் வீணானது தான் மிச்சம்.

அத்தம்மா அந்த பெண்ணை வெகு நாட்களாக தேடி கொண்டே இருந்தார். அவர் திரும்ப வரவே இல்லை.

நான் முதலில் சமைக்க ஆரம்பித்து செய்த ரசம் தான்.அப்பொழுது பள்ளி மாணவி தான்.

ஒரு தடவை அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாத போது தான் செய்தேன்.
அப்பொழுது நான், அம்மா, அத்தம்மா மற்றும் வீட்டு வேலைக்கு இருக்கும் பெண்ணின் மகள் தான் இருந்தோம்.

நான் தான் ரசம் வைப்பேன் என்று அத்தம்மாவை அடுப்படி அருகே கூட வர விடவில்லை.இந்த ரசம் வைப்பதற்கு எனக்கு அசிஸ்டன்ட் வேறு ..

 நானும் எனக்கு தெரிந்த வரையில் ரசம் செய்து விட்டேன். எனக்கு அளவு தெரியாததால் ஒரு கோப்பை அளவு தான் செய்தேன். அம்மா சாப்பிடவில்லை.நாங்கள் மூவரும் சாப்பிட்டு விட்டோம்.

என் அத்தம்மா என் ரசத்தை வெகுவாக பாராட்டினார்.

இரவு உணவின் போது என்  அம்மாவிடம் ரசம் ரொம்ப நன்றாக இருந்தது.நான் அதனை சாப்பிடுகிறேன் எடுத்து வா என்று கூறினார்.

உடனே அம்மா சிரித்துக் கொண்டே  உங்கள் பேத்தி வைத்ததே ஒரு  கோப்பை தானே என்று சொல்லி விட்டார்.

அதிலிருந்து என் அத்தம்மா எங்கள் வீட்டிற்கு எந்த உறவினர்கள் வந்தாலும் படையப்பா பட ஸ்டைலில் என் சமையல் திறனை புகழ்வார்.என் பேத்தி ரசம் வச்சா அவ்வளவு நல்லா இருக்கும் ஆனா ஒரு கோப்பை தான் செய்யும் என்று.

அவருக்கு நான் அதிகமாக சமைத்து கொடுத்ததில்லை.கல்லூரி நாட்களில் சில முறை மட்டுமே செய்திருக்கிறேன்.ஆனால் நான் செய்யும் வெஜிடபிள் பிரியாணி, மீன் குழம்பு போன்ற உணவுகளை ரசித்து சாப்பிடுவார்.

படிப்பறிவு இல்லாதவர் தான்.ஆனால் உங்கள் பேத்தி என்ன படிக்கிறாள் என்று கேட்டால் உடனே எலக்ட்ரானிக் எஞ்சினியர் என்று சொல்வார்.

என்ன அத்தம்மா இங்க்லீஷ் எல்லாம் பேசுறே என்று கேலி செய்தால் எனக்கு எல்லாம் தெரியும் என்று புன்னகைப்பார்.

அத்தம்மா இறந்து இந்த வருடத்துடன் 9 வருடங்கள் ஆகின்றன.அவர் இறந்தது ஒரு கிறிஸ்மஸ் அன்று தான். 

என் அத்தம்மாவை பற்றிய பதிவு போட வேண்டுமென்ற என் நெடுநாள் ஆசை நிறைவேறியது.

நன்றி....

முதல் பதிவு இங்கே :

அத்தம்மாவின் அலம்பல்கள் - 1




2 கருத்துகள்:

  1. அத்தம்மா முட்டை வாங்கியதை நினைத்து நானும் ரசித்தேன். ஆனால் அத்தம்மா இப்போது உங்களுடன் இல்லை என்றவுடன் வருத்தம் ஏற்பட்டது உண்மை ஷமீ.

    பதிலளிநீக்கு
  2. என் அத்தம்மாவை பற்றிய பதிவை ரசித்ததற்கு நன்றி சாரதா அம்மா...

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes